திங்கள், 31 டிசம்பர், 2012

மலேகான் குண்டுவெடிப்பு:ஹிந்துத்துவா தீவிரவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டான்!


மும்பை:2006-ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவைத்ததை அண்மையில் கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதி மனோகர் சிங் ஒப்புக்கொண்டதாக என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட மனோகரை என்.ஐ.ஏ மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. மலேகான் குண்டுவெடிப்பில் சங்க்பரிவார அமைப்புகளின் பங்கு வெளியான பிறகு நடக்கும் முதல் கைது இதுவாகும். மனோகர் சிங்கிடமிருந்து ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளதாக சிறப்பு அரசு தரப்பு வழக்குரைஞர் ரோஹிணி ஸாலியான் கூறினார். மனோகர் சிங்கை கஸ்டடியில் வைத்து விசாரித்தால் இதர குற்றவாளிகளைக் குறித்த தகவல் கிடைக்கும் என்று என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 2007-ஆம் ஆண்டு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான ராஜேந்தர் சவுதரியிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மனோகர் சிங் கைது செய்யப்பட்டான். சவுதரிக்கு எதிராக நீதிமன்றம் ப்ரொடக்‌ஷன் வாரண்டை பிறப்பித்திருந்தது. மாலேகானில் 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 37 பேர் உயிரிழந்தனர்; 100க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

சர்தாரி இந்தியா செல்லும் திட்டம் இல்லை:பாக்.


இஸ்லாமாபாத்: கிரிக்கெட் போட்டிகளை காண பாகிஸ்தான் அதிபர் சர்தாரி இந்தியா செல்லும் திட்டம் எதுவுமில்லை என அதிபர் மாளிகை செய்திதொடர்பாளர் கூறினார். இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி டுவென்டி-20 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. தற்போது ஒரு நாள் (50ஓவர்கள்) போட்டி சென்னையில் முடிந்துவிட்டது. இந்நிலையில் ‌‌மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் நடக்க உள்ள மற்றொரு போட்டியை காண பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி இந்தியா வருகை தர உள்ளதாகவும், இதி்ல் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் ஆகியோர் கலந்து கொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் பரவின. இது குறித்து அதிபர் மாளிகை ‌செய்தி தொடர்பாளர் பரக்கத்துல்லா பாபர் கூறுகையில், இது வெறும் வதந்திதான், இந்தியா வருமாறு அவருக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை.அப்படியிருக்கையில் சர்தாரி இந்தியா வரும் திட்டமில்லை. அழைப்பு விடுத்தால் பரிசீலிக்கலாம் என்றார்.

ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு: 12 பேர் பலி


பாக்தாத்: ஈராக்கில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 12 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு யாரும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை

புதன், 5 டிசம்பர், 2012

பீஜே காலர் ட்யூன்கள் - பி.எஸ்.என்.எல். வோடோஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் அறிமுகம் :


இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட இசைகளையும் , கேட்பதற்கு அருவருப்பான கொச்சையான சினிமா பாடல்களையும் காலர் ட்யூன்களாக மாற்றுமதத்தவர்கள் மட்டும் பயன்படுத்தவில்லை. முஸ்லிம்களும் வேறுவழி இல்லாமல் பயன்படுத்தி வந்தனர். பெரும்பாலான முஸ்லிம்கள் இந்த காலர் ட்யூன்கள் பயன்படுத்துவதில்லை.அதற்கு விடை சொல்லும் விதமாக இப்போது தொலைதொடர்பு நிறுவனங்கள் இஸ்லாமியர்கள் பயன்பெறும் விதமாக ஏகத்துவ காலர் ட்யூன்களை அறிமுகப்படுத்தியுள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏகத்துவ காலர் ட்யூன்களை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிமுகப்படுத்தியது. பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள ஏகத்துவ காலர் ட்யூன்கள் முஸ்லிம்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அல்ஹம்துலில்லாஹ். அதைத்தொடர்ந்து தற்போது வோடோஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களும் ஏகத்துவ காலர் ட்யூன்களை அறிமுகப்படுத்தியுள்ளன. பீஜே அவர்கள் உரையாற்றிய, “இதுதான் இஸ்லாம்” என்ற தலைப்பிலான உரையிலிருந்து 20 தலைப்புகள் காலர் ட்யூன்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வோடோஃபோன் வாடிக்கையாளர்கள் காலர் ட்யூன்களை ஆக்டிவேட் செய்ய: கீழ்க்கண்ட தலைப்புகளில் தாங்கள் விரும்பும் காலர் ட்யூன் கோடு நம்பரை உங்கள் மொபைலில் டைப் செய்து டயல் பட்டனை பிரஸ் பண்ணினால் நீங்கள் விரும்பும் தலைப்பிலான ஏகத்துவ காலர் ட்யூன் ஆக்டிவேட் ஆகிவிடும். ஐடியா வாடிக்கையாளர்கள் ஏகத்துவ காலர் ட்யூன்களை ஆக்டிவேட் செய்ய: DT என்று டைப் செய்து இடைவெளி விட்டு கீழ்க்கண்ட பட்டியலில் தாங்கள் விரும்பும் தலைப்பிலான காலர் ட்யூன் கோடு நம்பரை டைப் செய்து 55456 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் நீங்கள் தலைப்பிலான ஏகத்துவ காலர் ட்யூன் ஆக்டிவேட் ஆகிவிடும். பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களாக தாங்கள் இருப்பீர்களானால், கீழ்க்கண்ட தலைப்புகளில் தங்களுக்கு விருப்பமான தலைப்பிற்கான கோடு எண்ணை 56700 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் நீங்கள் விரும்பும் தலைப்பிலான ஏகத்துவ காலர் ட்யூன் ஆக்டிவேட் ஆகிவிடும். குறிப்பு : பி.எஸ்.என்.எல். மற்றும் ஐடியா ஆகிய இரண்டு நிறுவனங்களின் ஏகத்துவ காலர் ட்யூன் கோடு நம்பர்கள் ஒரே கோடு நம்பர்கள்தான். பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் 56700 என்ற எண்ணுக்கும், ஐடியா வாடிக்கையாளர்கள் DT என்று டைப் செய்து இடைவெளி விட்டு குறிப்பிட்ட கோடு நம்பர்களை டைப் செய்து 55456 என்ற எண்ணுக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். ஏர்செல் மற்றும் ஏர்டெல் ஆகியவற்றில் வெகுவிரைவில் ஏகத்துவ காலர் ட்யூன்கள் அறிமுகம்: பி.எஸ்.என்.எல், வோடோஃபோன், ஐடியா ஆகிய செல்பேசி நிறுவனங்கள் ஏகத்துவ காலர் ட்யூன்களை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து ஏர்செல் மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்களும் கூடிய விரைவில் ஏகத்துவ காலர் ட்யூன்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

‘‘ஈரான் சொல்வது பொய்’’ வெள்ளை மாளிகை சொல்கிறது


வாஷிங்டன், - ஈரான் அணு உலைகள் அமைத்து, அணுக்குண்டு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதாக உலக நாடுகள் சந்தேகிக்கின்றன. இதை ஈரான் மறுத்து வருகிறது.இந்த நிலையில் அமெரிக்காவின் ஸ்கேன் ஈகிள் என்ற ஆளில்லா உளவு விமானம் வளைகுடா நாடுகளில் உளவறிந்துவிட்டு, ஈரானுக்கு உளவு பார்க்க வந்ததாகவும், அதை ஈரான் பிடித்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.இந்த தகவல்களை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் வெள்ளை மாளிகை மறுத்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜெய் கார்னே கூறுகையில், ‘‘ஈரான் கூறுவது உண்மை என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் கிடையாது. ஈரான் சொல்வது பொய்’’ என கூறினார்.இதேபோல் கடற்படை செய்தி தொடர்பாளரும், ஈரானின் கூற்றை மறுத்துள்ளார்.

ஈரானில் 5.5 அளவுள்ள நிலநடுக்கம்: 5 பேர் பலி


ஈரான், ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து, அப்பகுதியில் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. இதை தொடர்ந்து, மக்கள் தெருவிற்கு ஓடி வந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தினால் 5 பேர் பலியாகியுள்ளனர் என்று அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை உயரலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல்: 3 பேர் பலி


இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் மாகாணத்தில் இன்று அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர். மேலும், பலர் காயம் அடைந்துள்ளனர். முபாரக் கிராமத்தில் தீவிரவாதிகளை குறிவைத்து இன்று காலை இரண்டு ஏவுகணைகளை அமெரிக்க ராணுவம் செலுத்தி உள்ளது. தலிபான் மற்றும் அல்-கொய்தா தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியான இங்கு தொடர்ந்து அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

துபாய் சிறையில் கைதிகளை சந்தித்த ஆந்திர குழுவினர்


துபாய்:துபாய் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, இந்திய கைதிகளை, ஆந்திர குழுவினர் சந்தித்து பேசினர். துபாய் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்களை, குடிபெயர்ந்தோர் உரிமை கழகத்தை சேர்ந்தவர்கள், சமீபத்தில் சந்தித்து பேசினர்.இந்த கழகத்தின் தலைவர் நாராயணசாமி கூறியதாவது:துபாயில் உள்ள, "அல் அவீர்' சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஆந்திராவை சேர்ந்த 13 பேரை, சந்தித்து பேசினோம். வளைகுடா நாடுகளில், 1,200க்கும் அதிகமான இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இதேபோல வளைகுடாவை சேர்ந்த பலர், இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பரஸ்பரம் ஒப்படைப்பது குறித்து, கடந்த ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.இந்த ஒப்பந்தம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. விரைவில் இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டால், பல ஆண்டுகளாக, சிறையில் தவிக்கும், இந்தியர்கள் விடுவிக்கப்படுவார்கள். இந்திய அரசும், ஆந்திரா உள்ளிட்ட மாநில அரசுகளும், கைதிகளின் சார்பில், சட்ட உதவி அளிக்க வேண்டும்.இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

இஸ்ரேலுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு வலுக்கிறது


லண்டன்/பாரிஸ்:சிறப்பு அந்தஸ்தை கொண்ட பார்வையாளர் பதவி ஐக்கிய நாடுகள் அவையில் ஃபலஸ்தீனுக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து காழ்ப்புணர்ச்சியில் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இஸ்ரேலின் நடவடிக்கை அமைதி முயற்சிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது. பிரான்சு, பிரிட்டன் ஆகிய நாடுகள் இஸ்ரேல் தூதர்களை அழைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன. ரஷ்யாவும், ஜெர்மனியும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. ஐ.நா வில் சிறப்பு பார்வையாளர் அந்தஸ்திற்கான அங்கீகாரம் ஃபலஸ்தீனுக்கு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இஸ்ரேல், ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அதிகப்படுத்த உத்தரவிட்டது. இந்நடவடிக்கை அமைதி முயற்சிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். குடியிருப்புகளை கட்டும் இஸ்ரேலின் நடவடிக்கையை அங்கீகரிக்க முடியாது. இது மேற்கு கரையிலும், கிழக்கு ஜெருசலத்திலும் ஃபலஸ்தீனர்களுக்கு இடையேயான உறவை துண்டிக்கவே உதவும். இரு நாடுகள் என்ற தீர்வை இது சீர்குலைப்பதாகும் என்று பான் கீ மூன் கூறியதாக அவரது செய்தி தொடர்பாளர் மார்டின் நிசர்கி தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இரவு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடுமையான எதிர்ப்புகளையும் புறக்கணித்து சிறப்பு பார்வையாளர் அந்தஸ்தை பெற்ற நாடு என்ற அங்கீகாரத்தை ஃபலஸ்தீன் பெற்றது. ஐ.நா பொது அவையில் வாக்கெடுப்பு நடந்த தினத்திலேயே ஃபலஸ்தீனில் 3000 யூதக் குடியிருப்புகளை கட்டுவதற்கு நெதன்யாகு உத்தரவிட்டார். ஃபலஸ்தீன் ஆணையத்திற்காக வசூலித்த வரிகள் உள்ளிட்ட நிதிகளையும் முடக்குவதாக நேற்று முன் தினம் இஸ்ரேல் அறிவித்தது. ஃபலஸ்தீன் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இஸ்ரேலுக்கு பிரிட்டனும், பிரான்சும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. பாரிஸில் இஸ்ரேல் தூதரை பிரான்சு அரசும், லண்டனில் இஸ்ரேல் தூதரை பிரிட்டனும் அழைத்து யூதக் குடியிருப்புகளை அதிகரிக்கும் இஸ்ரேலின் அராஜக நடவடிக்கைக்கு எதிர்ப்பை தெரிவித்தனர். ஸ்டாக்ஹோமில் உள்ள இஸ்ரேல் தூதரை அழைத்து சுவீடன் அரசும் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நடவடிக்கைக்கு ரஷ்யாவும், ஜெர்மனியும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். வழக்கத்திற்கு மாறாக இஸ்ரேலுக்கு எதிராக பிரிட்டன் கடுமையான அறிக்கையை வெளியிட்டுள்ளது. தீர்மானத்தை இஸ்ரேல் வாபஸ் பெறாவிட்டால் கடுமையான எதிர்விளைவுகள் ஏற்படும் என்று பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டிப்பதாகவும் பிரிட்டன் அறிவித்துள்ளது. ஐ.நா பொது அவையில் வாக்கெடுப்பு நடந்தபோது பிரிட்டன் கலந்துகொள்ளவில்லை. இஸ்ரேலில் தங்களின் தூதரை பிரிட்டன் திரும்ப அழைக்கும் என்று இஸ்ரேல் பத்திரிகையான ஹாரட்ஸ் கூறுகிறது. இஸ்ரேலில் தங்களது தூதரையும் திரும்ப அழைக்க பிரான்சும் ஆலோசித்து வருகிறது. அதேவேளையில் இச்செய்திகள் குறித்து இரு நாடுகளின் தூதரகங்களும் பதில் அளிக்கவில்லை. இஸ்ரேலின் முடிவு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் தடையை ஏற்படுத்தும் என்று பிரான்சு அரசு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு கடிதம் எழுதியுள்ளது. ஐ.நா அங்கீகாரத்திற்கான ஃபலஸ்தீனின் முயற்சிக்கு முதலில் ஆதரவை தெரிவித்த ஐரோப்பிய நாடு பிரான்சு ஆகும்.

பாப்ரி மஸ்ஜித் நினைவு தினத்தில் போஸ்டர் ஒட்டிய தமுமுக நகர தலைவர் கைது


நெல்லை:1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் நாள் அயோத்தியில் இந்தியாவின் வரலாற்றுச் சின்னமும், முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலமுமான பாபரி மஸ்ஜித் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் இடித்து தள்ளப்பட்டது. இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்து 20 ஆண்டுகள் நிறைவுறுகின்றன. இன்றளவும் உரிய நீதி வழங்கப்படவில்லை குற்றவாளிகள் கைதும் செய்யப்படவில்லை. இந்நிலையில் ஏர்வாடி பகுதியில் தமுமுக சார்பில் ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. தங்களது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் நோக்கில் ஒட்டப்பட்ட அந்த நோட்டீஸில் வன்முறையை தூண்டும் வகையில் வாசகங்கள் இடம் பெற்றிருந்ததாகவும், அனுமதியின்றி ஒட்டப்பட்டதாகவும் போலீஸ் கூறுகிறது. இதை தொடர்ந்து ஏர்வாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த நோட்டீசுகளை அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக தமுமுக நகர தலைவர் பக்ருதீன், செயலாளர் ஷாஜகான் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இன்னொஸன்ஸ் திரைப்பட விவகாரத்தில் மத்திய அரசுக்கும்,கூகிளுக்கும் நீதிமன்றம் நோட்டீஸ்


புதுடெல்லி:அமெரிக்காவில் இஸ்லாத்தின் எதிரிகள் தயாரித்த இன்னொஸன்ஸ் ஆஃப் முஸ்லிம் என்ற திரைப்படத்தை இணையதளங்களில் இருந்து நீக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மத்திய அரசுக்கும், இணையதள சேவை நிறுவனமான கூகிளுக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தலைமை நீதிபதி டி.முருகேசன், நீதிபதி ராஜீவ் சஹாய் ஆகியோரைக் கொண்ட டிவிசன் பெஞ்ச், போலீஸ் கமிஷனர், செய்தி ஒலிபரப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், கம்பெனி விவகார அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், சிறுபான்மை விவகார அமைச்சகம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இத்திரைப்படத்தின் 13 நிமிடங்களைக் கொண்ட காட்சிகளை நீக்கக் கோரி ஜம்மியத்துல் உலமாயே ஹிந்தின் பொதுச் செயலாளர் மவ்லானா மஹ்மூத் ஆஸாத் மதனி நீதிமன்றத்தை அணுகினார்.இவ்விவகாரத்தில் நிரந்தர தீர்வை கோரிய நீதிமன்றம் வழக்கை அடுத்த மாதம் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

திங்கள், 3 டிசம்பர், 2012

பாகிஸ்தானில் இந்து கோவில் இடிப்பு விவகாரம் நியாயமாக நடந்த பாகிஸ்தான்


பாகிஸ்தானில் கராச்சி நகரில் இருந்த 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீராம் மந்திர் என்ற இந்து கோவில் இடிக்கப்பட்டது. அதையொட்டி வசித்த இந்துக்களின் வீடுகளும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. கோர்ட்டு தடை உத்தரவையும் மீறி இதில் நில உரிமையாளர் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதை கண்டித்து சிறுபான்மை அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த விவகாரம் பாகிஸ்தான் அதிபர் சர்தாரியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பான விவரம் அடங்கிய விளக்க அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே தரும்படி அவர் உத்தரவிட்டார். இந்த தகவலை அதிபரின் செய்தி தொடர்பாளர் பர்ஹதுல்லா பாபர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் இப்போது ஆல் இந்திய தௌஹித் ஜமாஅத் ஆக பெயர் மாற்றம்.


கேரளாவில் உள்ள அனைத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைகளையும் ஒன்றிணைத்து கேரள மண்டலப் பொதுக்குழு எர்ணாகுளத்தில் மஸ்ஜிதுர் ரஹ்மான் வளாகத்தில் கடந்த 2-12-2012 அன்று நடைபெற்றது.   கேரள மண்டலத்தின் எர்ணாகுளம், திருவனந்தபுரம், பாலக்காடு புதுநகரம், பெரும்பாவூர், சங்கனசேரி, வண்டிப்பெரியார் ஆகிய பகுதிகளில் தனித்தனியே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைச் சகோதரர்கள் பல்வேறு பெயர்களில் இயங்கி வந்தனர். இதனை ஒருங்கிணைக்கும் முகமாக எர்ணாகுளத்தில் 02.12.12 அன்று மாநில நிர்வாகிகள் எம்.ஐ.சுலைமான், கோவை ரஹ்மத்துல்லாஹ், மாலிக் ஆகியோர் முன்னிலையில் கேரள மண்டலப் பொதுக்குழு நடைபெற்றது. இதில் கேரளாவில் உள்ள அனைத்து கிளைகளையும் இணைத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் செயல்படும்போது ஏற்படும் மொழிப்பிரச்சனையை தவிர்ப்பதற்காகவும், நிர்வாகத் தொடர்புகளுக்காகவும் ஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இயங்கிக் கொள்ளலாம் என்றும், அனைத்து கிளைகளையும் ஒன்றிணைத்து எர்ணாகுளத்தை மண்டல தலைமையிடமாகக் கொண்டு செயல்படுவது என்றும் முடிவெடுக்கப்பட்டு மண்டல நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கேரள மண்டல நிர்வாகிகள் : தலைவர் – J.M.A ஹம்சா , செயலாளர் – மீரான் மைதீன் , பொருளாளர் – A. அஜ்மல் ஹுசைன் (கோபி), து. தலைவர் – ஷாநவாஸ் – வண்டிபெரியார், து.செயலாளர்கள் – சபீருதீன் – திருவனந்தபுரம், து.செயலாளர்கள் – முஹம்மது – பெரும்பாவூர், து.செயலாளர்கள் – ஹாரிஸ் – புதுநகரம்.

ஃபலஸ்தீனுக்கான வரிப்பணம் முடக்கம்! தொடரும் இஸ்ரேலின் பழிவாங்கும் நடவடிக்கை!


ஜெருசலம்:ஃபலஸ்தீனுக்கு ஐக்கிய நாடுகள் அவையில் பார்வையாளர் அங்கீகாரம் கிடைத்ததால் ஆத்திரமடைந்துள்ள ஆக்கிரமிப்பு இஸ்ரேல், அந்நாட்டிற்கான 12 கோடி டாலர் வரிப் பணத்தை முடக்கியுள்ளது. இஸ்ரேல் எலக்ட்ரிக் கார்ப்பரேசனுக்கு ஃபலஸ்தீனர்கள் அடைக்கவேண்டிய கடன் தொகையை இத்தொகை மூலம் அடைக்கப்படும் என்று இஸ்ரேல் நிதியமைச்சர் யுவல் ஸ்டினிட்ஸ் கூறியுள்ளார். ஃபலஸ்தீன் ஆணையத்திற்கு இம்மாதம் வரிப்பணத்தை ஒப்படைக்கும் எண்ணம் இல்லை என்று அவர் கூறினார். ஐக்கிய நாடுகள் அவையில் ஃபலஸ்தீன் பெற்ற சரித்திர வெற்றியில் அரண்டு போன இஸ்ரேல், மேற்கு கரையில் யூதர்களுக்காக மேலும் 3 ஆயிரம் வீடுகளை கட்டப்போவதாக நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. அதற்கு அடுத்து வரிப்பணத்தை முடக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஃபலஸ்தீனுக்கான பதவியை உயர்த்திய ஐ.நா அவை வாக்கெடுப்பை ஞாயிற்றுக் கிழமை கூடிய இஸ்ரேலிய அமைச்சரவை நிராகரித்தது. ஃபலஸ்தீன் ஆணையத்துடன் நடக்கும் எதிர்கால பேச்சுவார்த்தைகளின் அடிப்படை ஐ.நா தீர்மானமாக இருக்காது என்றும், அமைதிக்கான தீர்வுக்கு இது உதவாது என்றும் இஸ்ரேல் அமைச்சரவை தெரிவித்துள்ளது. ஃபலஸ்தீனுக்கான நிதியை முடக்கியதில் ஆச்சரியமில்லை. ஃபலஸ்தீனுக்கு ஐ.நாவில் உயர்ந்த பதவியை அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்று ஃபலஸ்தீனுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இஸ்ரேல் ஏற்கனவே மிரட்டல் விடுத்திருந்தது. ஃபலஸ்தீனுக்கு கிடைத்த உயர் பதவி கொந்தளிப்பை ஏற்படுத்தக் கூடியது என்று இஸ்ரேல் நிதியமைச்சர் ஸ்னிட்ஸ் புலம்புகிறார். ஒரு தலைபட்சமான முயற்சியை ஃபலஸ்தீனர்கள் தொடர்ந்தால் அவர் நட்புறவு ஒத்துழைப்பை எதிர்பார்க்கவேண்டாம். மேலும் 12 கோடி அமெரிக்க டாலர் வரிப்பணத்தை தடுத்து வைப்போம் என்று ஸ்னிட்ஸ் மிரட்டல் விடுத்துள்ளார். ஃபலஸ்தீன் சந்தைகளுக்கு இஸ்ரேல் துறைமுகம் மூலம் கொண்டு செல்லும் பொருட்களுக்கு கஸ்டம்ஸ் தீர்வை கையில் செலுத்தும் லட்சக்கணக்கான டாலர் தொகையை எல்லா மாதமும் ஃபலஸ்தீன் ஆணையத்திடம் அளிக்கப்பட்டு வருகிறது. இத்தொகை மூலம் தான் ஃபலஸ்தீன் ஆணையம் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கிறது. ஃபலஸ்தீன் ஆணையத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான தூதரக மோதல்களின் போது வரிப்பணத்தை இஸ்ரேல் தடுத்து வைப்பதுண்டு.

ஆப்கான்:நேட்டோ ராணுவ தளம் மீது தாக்குதல் – 15 பேர் மரணம்


காபூல்:ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்பு நேட்டோ படையினரின் ராணுவ தளம் மீது நடத்தப்பட்ட போராளி தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். பலியானவர்களில் நான்கு பேர் ஆப்கான் ராணுவத்தினரும், இரண்டு பேர் பொதுமக்களும் ஆவர்.
தாக்குதல் நடத்திய ஒன்பதுபேரும் மரணித்துள்ளனர். 14 ஆப்கான் ராணுவத்தினருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான நேட்டோ ராணுவத்தினருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பான கூடுதல் செய்திகளை நேட்டோ வெளியிடவில்லை. ஜலாலாபாத் விமான தளத்திற்கு அருகே உள்ள நேட்டோ தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தங்களின் ஒன்பது போராளிகள் நேட்டோ தளத்தில் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக தாலிபான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. கிரேனேடுகள், மோர்ட்டார்கள், துப்பாக்கிகள் ஆகியன உபயோகித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஜலாலாபாத்தில் இவ்வாண்டு 3-வது தாக்குதலை தொடுத்துள்ளது தாலிபான்

சிரியா அதிபர் அசாத்துக்கு ஒபாமா எச்சரிக்க‌ை


வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் ஒபாமா, ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவதற்கு எதிராக சிரியா அதிபர் பசர் அல்-அசாத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.சிரியா மக்கள் மீது, ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி ‌துன்புறுத்துவதாக கவலை தெரிவித்ததாக வெள்ளை மாளிகை செய்தி செயலர் ஜே.கார்னி கூறியுள்ளார்.

எகிப்து அதிபரின் ஆதரவாளர்கள் முற்றுகையால்சுப்ரீம் கோர்ட் நடவடிக்கைகள் ஒத்திவைப்பு


கெய்ரோ: அதிபர் முகமது முர்சியின் ஆதரவாளர்கள், சுப்ரீம் கோர்ட்டை முற்றுகையிட்டதால், அனைத்து விசாரணைகளையும், நீதிபதிகள் கால வரையறையின்றி ஒத்தி வைத்தனர்.எகிப்து நாட்டை, ஹோஸ்னி முபாரக், கிட்டத்தட்ட, 30 ஆண்டுகளாக ஆட்சி செய்தார். இவரது குடும்ப ஆட்சியை எதிர்த்து, மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, முபாரக், ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டார். ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்ட தேர்தலில், முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் தலைவர், முகமது முர்சி, அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.முர்சி, அதிபரானது முதல், நீதித் துறைக்கும், இவரது ஆட்சிக்கும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இடைக்கால ராணுவ ஆட்சியின் போது நடந்த பார்லிமென்ட் தேர்தலில், முறைகேடு நடந்ததாகக் கூறி, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட், பார்லிமென்டை கலைத்தது.ஆனால், அதிபர் முர்சி, "இந்த பார்லிமென்ட் மீண்டும் செயல்படும்' என, உத்தரவிட்டார். இதனால், அதிபர் மீது, நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர்.இந்நிலையில், தனக்கு எல்லையற்ற அதிகாரம் அளிக்க, வழி செய்யும், அரசியல் சாசனத்தை முர்சி, கடந்த வாரம் வெளியிட்டார். இதற்கு, எகிப்து எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். தனி நபரிடம் அதிகாரம் குவிந்திருப்பதற்கு, நீதிபதிகளும் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்."தன்னை கட்டுப்படுத்த சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை' என்ற, சலுகை அளிக்கும் அரசியல் சாசனத்தை, பார்லிமென்டின் ஒப்புதலுக்கு வைப்பதாக, முர்சி தெரிவித்துள்ளார். "ஏற்கனவே, பார்லிமென்ட் கலைக்கப்பட்டு விட்டதாக உத்தரவு இருப்பதால், முர்சியின் இந்த நடவடிக்கை செல்லாது' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது.எகிப்து பார்லிமென்ட் கலைக்கப்பட்டு விட்டது, என்ற உத்தரவு குறித்த தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிபர் முகமது முர்சியின் ஆதரவாளர்கள், சுப்ரீம் கோர்ட்டை முற்றுகையிட்டனர்.சுப்ரீம் கோர்ட்டின் நடவடிக்கைகளை முடக்கும் நோக்கோடு, அதிபரின் ஆதரவாளர்கள் செயல்படுவதாகக் கூறிய நீதிபதிகள், அனைத்து நடவடிக்கைகளையும் காலவரையறையின்றி ஒத்தி வைத்தனர்.

மாலத்தீவு அதிபர் வாகீத் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்


மாலே: மாலத்தீவு அதிபர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம், ரகசிய ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட உள்ளது.மாலத்தீவில், ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அதிபர் நஷீத், பிப்., மாதம் நடந்த புரட்சியில், ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். இதையடுத்து, துணை அதிபர் முகமது வாகீத், புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.நீதிபதியை கைது செய்ய உத்தரவிட்டது மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில், மாலத்தீவு ஜனநாயக் கட்சி தலைவர் நஷீத் கைது செய்யப்பட்டார்.இதற்கிடையே, அதிபர் வாகீத் மீது, மாலத்தீவு ஜனநாயகக் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தின் மீது, ரகசிய ஓட்டெடுப்பு நடத்த, பார்லிமென்ட் உறுப்பினர்களின் விருப்பம் கேட்கப்பட்டது.மாலத்தீவு பார்லிமென்ட்டில் மொத்தம், 75 உறுப்பினர்கள் உள்ளனர். ரகசிய ஓட்டெடுப்பை, 41 உறுப்பினர்கள் ஆதரித்துள்ளனர். 34 பேர் ரகசிய ஓட்டெடுப்பை ஆதரிக்கவில்லை. பெரும்பான்மையான உறுப்பினர்கள், ரகசிய ஓட்டெடுப்பை ஆதரித்ததால், விரைவில் இதற்கான தேதியை, சபாநாயகர் மஜ்லிஸ் அறிவிக்க உள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தில் மோடிக்கு கறுப்புக் கொடி!


அஹ்மதாபாத்:குஜராத் சட்டப் பேரவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே மீதமுள்ள சூழலில் சூரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடிக்கு கறுப்புக் கொடி காட்டப்பட்டது. முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜ.க எம்.பியுமான நவ்ஜோத் சிங் சித்துவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கறுப்புக் கொடி காட்டப்பட்டது. ஜுனகட் மாவட்டத்தில் விசவாதர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது சித்து, குஜராத் பரிவர்த்தன் கட்சியின் தலைவர் கேசுபாய் பட்டேல் தேச விரோத தலைவர் என்று கூறியிருந்தார். இதனைக் கண்டித்தே கறுப்புக் கொடி காட்டப்பட்டது. சூரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மோடிக்கு குஜராத் பரிவர்த்தன் கட்சியின் தொண்டர்கள் கறுப்புக் கொடியை காட்டினர். சித்துவின் மீது தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டது. இதுக் குறித்து கேசுபாய் பட்டேல் கூறியது: பா.ஜ.க மற்றும் மோடியின் உத்தரவை அறிக்கையின் மூலம் செயல்படுத்தியுள்ளார் சித்து. கசாபை போல என்னை தேச விரோதி என அழைத்துள்ளனர். குற்றச்சாட்டை நிரூபிக்க மோடிக்கு சவால் விடுக்கிறேன். நிரூபித்தால் தூக்கில் தொங்கவும் தயாராக இருக்கிறேன். மோசமான அறிக்கையின் மூலம் எவ்வாறேனும் வெற்றிப்பெற வேண்டும் என்பதற்காக கீழ்த்தரமான அரசியலை பா.ஜ.க நடத்துகிறது. இவ்வாறு பட்டேல் கூறினார். கேசுபாய் பட்டேலுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டதற்கு சித்து மீது பிபின் ஜக்ஜீவன் ருகானி என்பவர் தொடுத்த அவமதிப்பு வழக்கில் முதன்மை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேல் திங்கள் கிழமை தீர்ப்பு வழங்குவார்.

சனி, 1 டிசம்பர், 2012

ஆப்கானில் படை வாபஸ்: அமெரிக்க செனட் அங்கீகாரம்!


வாஷிங்டன்:ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவத்தை விரைவாக வாபஸ் பெற அமெரிக்க செனட் அங்கீகாரம் அளித்துள்ளது. 2014-ஆம் ஆண்டிற்கு பிறகும் அமெரிக்க ராணுவம் ஆப்கானில் தொடரும் என்ற பாதுகாப்பு செயலாளர் லியான் பெனட்டாவின் அறிக்கையை தொடர்ந்து செனட் இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. அமெரிக்க ராணுவம், ஆப்கானில் இருந்து வாபஸ் பெற்றால் அல்காயிதா மேலும் வலுப்பெறும் என்றும்,இதனால் அபாயம் அதிகரிக்கும் எனவும் பெனட்டா கூறியிருந்தார். ஆப்கானில் இருந்து 2014-ஆம் ஆண்டு நேட்டோ படை முற்றிலும் வாபஸ் பெறப்படும் என்றும், பாதுகாப்பு பொறுப்பு ஆப்கான் படையினரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருந்தது. அமெரிக்க படை ஆப்கானில் இருந்து வாபஸ் பெறும் தீர்மானத்திற்கு 62 வாக்குகள் ஆதரவாக கிடைத்தன. எதிர்த்து 33 வாக்குகள் கிடைத்தன. ராணுவத்தின் வாபஸ் குறித்து ஒபாமா ஒரு வாரத்திற்குள் அறிக்கையை வெளியிடுவார் என்று கருதப்படுகிறது.

பாக்.,கில் நிலச்சரி: 3 வீரர்கள் பலி


இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகேயுள்ள ஷரதா செக்டார் பிரிவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 3 ராணுவ வீரர்கள் சிக்கி பலியானார்கள். குறைந்தது 18 பேரை காணவில்லை. மீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், காணாமல் போனவர்களை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்திய நடிகைகள் நடித்த ஆபாச விளம்பரங்களுக்கு பாகிஸ்தான் தடை


இஸ்லாமாபாத்;""இந்திய நடிகைகள் நடித்த, "டிவி' விளம்பர படங்களை தடை செய்ய வேண்டும்,'' என, பாகிஸ்தான் எம்.பி.,க்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. பாகிஸ்தானில், ஏராளமான இந்திய, "டிவி' சேனல்களின் நிகழ்ச்சிகள், ஒளிபரப்பாகின்றன. பாலிவுட் படங்களுக்கு, பாகிஸ்தானில் அதிக ரசிகர்கள் உள்ளனர். "டிவி' நிகழ்ச்சிகளுக்கிடையே வரும், விளம்பர படங்களின் மாடல்கள், அரை குறை ஆடைகளுடன் போஸ் கொடுப்பதை, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதியே கண்டனம் தெரிவித்திருந்தார். "உடலில் உள்ள முடிகளை அகற்றும் க்ரீம் விளம்பரத்துக்கு, பாலிவுட் நடிகை கத்ரினா கைப், ஆபாச உடை அணிந்திருப்தை, குடும்பத்தினருடன் பார்க்க முடியாது' என, பாக்., சுப்ரீம் கோர்ட் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்."இந்திய, "டிவி' சேனல்களுக்கு தடை விதிக்க வேண்டும்' என, அங்குள்ள பழமைவாதிகள் நீண்ட நாட்களாக கோரி வருகின்றனர். இது தொடர்பாக விசாரித்த பார்லிமென்ட் குழுவினர் கூறியதாவது:பாகிஸ்தானுக்கு தனி கலாசாரம் உள்ளது. எனவே, இந்திய, "டிவி' நிகழ்ச்சிகள் பாகிஸ்தானில் ஒளிபரப்பு செய்யும் போது பாகிஸ்தான் கலாசாரத்துக்கு மதிப்பளிப்பதாக அமைய வேண்டும். குறிப்பாக, "டிவி' யில் செய்தி வாசிப்பவர்கள், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பெண்கள் தலையை துணியால் மூடியிருக்க வேண்டும். கழுத்து கீழே துப்பாட்டாவால் போட்டிருக்க வேண்டும். இவ்வாறு பார்லிமென்ட் குழுவினர் கூறியுள்ளனர். இந்த பரிந்துரையை ஏற்பதாக, பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சர், கமார் சமான் கைரா கூறியுள்ளார்.அவர் மேலும் குறிப்பிடுகையில், "இந்த விவகாரம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், தீர்ப்பு வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய அரசிடமும் இது குறித்து தெரியப்படுத்தியுள்ளோம்' என, கைரா தெரிவித்துள்ளார்.

ஐ.நா., சபையில் பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம்:


ஜெருசலேம்: ஐ.நா., சபையில் பாலஸ்தீனத்திற்கு உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடு என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு கரைப்பகுதியில் அவசர அவசரமாக 3 ஆயிரம் வீடுகளை கட்ட இஸ்ரேல் முடிவெடுத்துள்ளது. ஐ.நா., சபையில் சமீபத்தில் நடந்த, பாலஸ்தீனத்திற்கு உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடு அந்தஸ்து வழங்கக்கோரும் மசோதா 193 நாடுகள் ஆதரவுடன் நிறைவேறியது. மசோதாவுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 9 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அமைச்சரவையை நேற்று கூட்டி இது தொடர்பாக விவாதித்தார். அப்போது, பாலஸ்தீனத்திற்கு சொந்தமான, தற்போது இஸ்ரேல் வசம் உள்ள மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் பகுதிகளில் புதிய குடியிருப்புகளை கட்டுவது என முடிவெடுக்கப்பட்டது. அப்பகுதியில் யூதர்களை பெருமளவில் வசிக்க வைப்பதற்காக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இஸ்ரேலின் இந்த முயற்சிக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விக்டோரியா நூலண்ட், இஸ்ரேலின் இந்த நடவடிக்கை வருங்காலத்தில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைக்கும், சுமூக முடிவுக்கு எதிரானதாகும் என்று தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் இந்த நடவடிக்கை, பாலஸ்தீனம் என்ற நாடு பேப்பர் அளவிலேயே இருக்கும் என்றும், அவை ஒரு போதும் செயல்பாட்டிற்கு வராது என்பதை பாலஸ்தீனத்திற்கு இஸ்ரேல் தெரிவித்துள்ள ஒரு அறிவிப்பாகவே இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.