வியாழன், 28 ஜூன், 2012

கே.ஜி புத்தகத்தில் இறைத்தூதர் அவர்களை சித்தரித்து வரைபடம் – மணிப்பூர் முஸ்லிம்கள் போராட்டம்

A book prescribed for kindergarten in Manipur portrays a bearded man said to be the Prophet wearing turban and holding a book
இம்பால்:இறைத்தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களை சித்தரித்து கே.ஜி புத்தகத்தில் பதியப்பட்டுள்ள கார்ட்டூன் மணிப்பூரில் முஸ்லிம் மக்களிடையே போராட்டத்தை தூண்டக் காரணமாக அமைந்தது.
பண்கால் ஸ்டூடன்ஸ் ஆர்கனைசேசன்(PSO) அமைப்பு மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மணிப்பூர் பிரிவு இணைந்து போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தில் அந்த KG புத்தகத்தின் பிரதிகள் எரிக்கப்பட்டன.
இம்பாலை மையமாகக் கொண்ட பிரைம் பப்ளிகேசன் திங்கட்கிழமைக்குள் தங்களது அலுவலகத்திற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என PSO அமைப்பு கெடு விதித்துள்ளது.
பேபிலா ஜஸ்ஸல் என்ற எழுத்தாளரின் அந்த புத்தகத்தில் தாடியுடன் ஒரு மனிதர் தலைப்பாகை அணித்து கையில் புத்தகம் போன்ற ஒரு பொருளை வைத்துக் கொண்டு அவர்தான் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல் ) அவர்கள் என சித்தரிப்பது போல கார்ட்டூன் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
சில தனியார் பள்ளிகளில் இந்த GK  புத்தகம் மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. இருந்த போதும் இது மணிப்பூர் அரசாங்கம் மூலம் பரிந்துரைக்கப்படவில்லை.
புத்தகத்தின் 51-ம் பக்கத்தில் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மற்ற ஐந்து கடவுள்களுடன் இருப்பது போல் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
யாரும் முஹம்மது நபி(ஸல்) அவர்களைப் போல எந்த வரை படத்தையும் வரையக் கூடாது இது இஸ்லாத்திற்கு எதிரானது என பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மணிப்பூர் பிரிவின் தலைவர் முப்தி அர்ஷத் ஹுசைன் கூறினார்.
முஹம்மது நபி(ஸல்) அவர்களைப் போல சித்தரித்து வரைவது  இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரானது என PSO அமைப்பு கூறியுள்ளது. “முஹம்மது நபி(ஸல்) அவர்களை சித்தரித்து வரைவதை இஸ்லாம் தடை செய்துள்ளது” என PSO வின் தலைவர் முஹமது ஃபர்ஹானுதின் கூறினார்.
PSO அமைப்பு அந்த புத்தகத்தை தடை செய்துள்ளது போல அரசாங்கமும் அந்த புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என PFI  கோரிக்கை விடுத்தது.
பிரைம் பப்ளிகேசன் தங்கள் அலுவலகத்திற்கு வந்து மன்னிப்பு கேட்க தவறினால் அப்பதிப்பகத்தின் அனைத்து புத்தகங்களுக்கும் தடை விதிக்கப்படும் என PSO கூறியுள்ளது.
“அவர்கள் மிகப் பெரிய தவறை இழைத்து விட்டார்கள் , அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால் அது இஸ்லாத்திற்கு எதிராக செயல்படுவது போன்றது. அவர்கள் எங்களிடம் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்” என PSO வின் ஆலோசகர் ரகுமான் கூறினார்.

வெள்ளி, 8 ஜூன், 2012

கோவா குண்டுவெடிப்பு:ஹிந்துத்துவா தீவிரவாதி தமிழகத்தில் தலைமறைவு!

NIA hunts for Goa blast suspects in South
சென்னை:மர்கோவா குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டுவரும் குற்றவாளிகளான நான்கு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தலைமறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர்களை கைதுச்செய்ய தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) சிறப்புக்குழுவை உருவாக்கியுள்ளது.
இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட நான்குபேர் தலைமறைவாக உள்ளனர். கோவா மாநிலம் மர்கோவா குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய ஹிந்துத்துவா தீவிரவாதிகள் தென்னிந்திய மாநிலங்களில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தேசிய புலனாய்வு ஏஜன்சி தேடுதல் வேட்டையை துவக்கியுள்ளது.
கோவா குண்டுவெடிப்பு வழக்கில் தலைமறைவு குற்றவாளியான ஜெயப்பிரகாஷை(ஜெய் அன்னா என்ற ஜே.பி) தமிழகத்தின் கூடலூரிலும், கேரள மாநிலம் காஸர்கோட்டிலும் கண்டதாக புலனாய்வு ஏஜன்சிக்கு தகவல் கிடைத்தது. இவ்வழக்கில் தொடர்புடைய இதர 3 ஹிந்துத்துவா தீவிரவாதிகளான ருத்ராபாட்டீல், டி.சாரங் அங்கோல்கர், ஆர்.பிரவீண் லிங்கர் ஆகியோர் கேரளா மற்றும் கர்நாடகாவில் தலைமறைவாக இருப்பதாக இன்னொரு தகவல் என்.ஐ.ஏவுக்கு கிடைத்துள்ளது.
2009 அக்டோபர் 16-ஆம் தேதி தீபாவளிக்கு முந்தைய தினம் கோவா மாநிலம் மர்கோவாவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. குண்டுகளை வைக்க பைக்கில் கொண்டு செல்லும்போது ஒரு குண்டுவெடித்து சிதறியது. மற்றொரு குண்டை போலீஸ் செயலிழக்கச் செய்தது.
தீவிர ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தானைச் சார்ந்த 12 தீவிரவாதிகள் குண்டுவெடிப்பை நடத்தியதாக புலனாய்வுக் குழு கண்டுபிடித்தது. இதில் 2 பேர் வெடிக்குண்டை கொண்டு செல்லும்போது குண்டுவெடித்ததில் இறந்தனர். ஆறுபேர் கைது செய்யப்பட்டனர். நான்கு பேர் தலைமறைவாக உள்ளனர்.
நான்குபேரைக் குறித்து தகவல் கிடைப்பவர்கள் தேசிய புலனாய்வு ஏஜன்சியின் ஹைதராபாத் கட்டுப்பாட்டு அறைக்கு கீழ்க் கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்:
040-277 64488/ 094937 99335/094937 99363/094937 99354

பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிரூபர்கள் மீது நித்தியானந்தா சீடர்கள் தாக்குதல்

journalist attack nithyananda ashrams
பெங்களூர்:நித்தியானந்தாவின் அமெரிக்க பெண் சீடர் ஆர்த்தி ராவ், பிடதி ஆசிரம ரகசியங்களை வீடியோ எடுத்து வெளியிட்டார். இது தொடர்பாக சமீபத்தில் சுவர்ணா என்ற கன்னட டி.வி யில் பேட்டியும் அளித்தார். அதற்கு விளக்கம் அளிக்க, பிடதி ஆசிரமத்தில் நித்தியானந்தா நேற்று பத்திரிகையாளர்களை வரவழைத்தார்.
டி.வி பேட்டியில் நித்தியானந்தா குறித்து ஆர்த்தி ராவ் கூறுகையில்; “நித்யானந்தா, காவி உடை அணிந்து மக்களை ஏமாற்றுகிறார். அவரால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் அந்தஸ்தை எண்ணி, வெளியில் சொல்லாமல், குமுறிக் கொண்டுள்ளனர். அவரிடம் எந்த சக்தியும் இல்லை. பக்தர்களை ஏமாற்றி, பணம் சம்பாதித்தார். இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் சொத்துகள் உள்ளன. இது குறித்து, அரசு விசாரணை செய்ய வேண்டும். தியானம் கற்றுக் கொள்ள வந்த என்னிடம், பல முறை உறவு கொண்டார். அவரால் பாதிக்கப்பட்ட நான், அவர் மீது வழக்கு தொடர உள்ளேன்” என்று கூறியிருந்தார்.
ஆர்த்தி ராவ் குறித்து நித்தியானந்தா கூறுகையில், “பாலியல் நோய்க்காக ஆர்த்தி ராவ் என்னிடம் சிகிச்சை பெற வந்தார். அவருடன் எனக்கு குரு சிஷ்யை உறவு மட்டுமே உள்ளது. அவர் மீது அமெரிக்கா, தமிழகம், ராம நகரம், வாரணாசியில் வழக்குகள் உள்ளன. அவற்றில் வழங்கிய சம்மனை பெற்று கொள்ளாமல் தலைமறைவாகி உள்ளார்” என்றார்.
அப்போது டி.வி நிருபர் ஒருவர் குறுக்கிட்டு,”ஆர்த்தி ராவ் விவகாரம் தொடர்பாக உங்களுக்கு வந்த சம்மனை ஏன் வாங்கவில்லை?” என கேட்டார். அதற்கு, “எனக்கு சம்மன் எதுவும் வரவில்லை” என்று நித்தியானந்தா பதிலளித்தார். உடனே, “அந்த சம்மன் நகல் என்னிடம் உள்ளது” என கூறியபடி ஒரு காகிதத்துடன் நித்தியானந்தா அருகே நிருபர் சென்றார்.
“சம்மன் நகலை காண்பித்து, சம்மனை வாங்காமல், திருப்பி அனுப்பியுள்ளீர்கள். சம்மனை பெறாவிட்டால், நீதிமன்றம் விட்டு விடாது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி மீண்டும் வாரண்ட் வரும்” என்றார். இதனால், கோபமடைந்த நித்யானந்தா, பத்திரிகையாளர் சந்திப்பில், மற்றவர்களுக்கு அனுமதியில்லை. பத்திரிகையாளர்கள் தவிர, மற்றவர்களை வெளியேற்றுங்கள் என்று சீடர்களுக்கு உத்தரவிட்டார். இதனால் சீடர்கள், நிருபர் அஜித்தை வெளியேற்ற முயற்சித்தனர். இதனால் வாக்குவாதம் முற்றியது. கைகலப்பு சூழ்நிலை உருவானது. நிருபர்கள் சிலர், கை கலப்பை கட்டுப்படுத்த முயன்றனர்.
உடனடியாக நித்யானந்தா, “பிரஸ் மீட்டுக்காக அழைத்தேன். ஆனால், தேவையின்றி சட்ட விஷயங்கள் பேசுகின்றவர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நேரங்களில், பக்தர்களும், சீடர்களும் அரணாக இருந்து பாதுகாக்க வேண்டும்” என்றார். பேட்டியின் போது, அடிக்கடி மாஜி நடிகை, ராகசுதாவை அழைத்து, பத்திரிகையாளர்களை அங்கிருந்து வெளியேற்றும்படி உத்தரவிட்டார். இந்த ரகளையின் போது, மதுரை ஆதீனம், தன் கன்னத்தில், ‘கை’ வைத்தவாறு, சோகமாக பார்த்து கொண்டிருந்தார்.
உடனே நிருபரை சூழ்ந்த கூட்டம், அவரை தாக்கி வெளியேற்றியது. பெண் சீடர்களும் பத்திரிகையாளர்களை சூழ்ந்து கோஷமிட்டதால் பத்திரிகையாளர் சந்திப்பு பாதியில் முடிந்தது. இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

திங்கள், 4 ஜூன், 2012

10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு – 83.4% மாணவர்கள் தேர்ச்சி – தஞ்சை மாணவர் முதலிடம்

பி.ஆர்.பப்ளிக் பள்ளி மாணவர் ஸ்ரீநாத் 500 க்கு 497 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார்
சென்னை:பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்  இன்று வெளியிடப்பட்டது. இந்த வருடம் 83.4%(மொத்தம்) மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இத்தேர்வில் தஞ்சாவூரை சேர்ந்த மாணவர் முதலிடம் பெற்றார்.
தஞ்சாவூரை சேர்ந்த பி.ஆர்.பப்ளிக் பள்ளி மாணவர் ஸ்ரீநாத் 500 க்கு 497 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார்.
496 மதிப்பெண்கள் பெற்று 6 பேர் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். இதில் நாகர்கோவில் பள்ளியின் ஜென்கின்காட்பிரே, நெல்லை மாணவி நந்னி, ஈரோடு வித்யா பளளி மாணவி ஸ்வாதி ,கரூர் மெட்ரிக் பள்ளி மாணவர் கவின், செங்கல்பட்டு மாணவி அகிலா , நெல்லை மாணவி மகாலட்சுமி ஆகியோர் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தவர்கள் ஆவர்.
495 மதிப்பெண்கள் எடுத்து 11 பேர் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர். இதில் ஸ்மிதா(நெல்லை), சூர்யா(சிவகாசி), அபி‌ஷேக்(சிவகாசி), தரணி(பொள்ளாச்சி), வி்ண்மிதா(ஈரோடு), ஷர்மிளா(ஈரோடு), ஜஸ்டின் சேவியர்(பொன்னேரி), ராஜேஸ்வரி(காஞ்சிபுரம்),  அம்ரிதா (திருப்பத்தூர்), ஸ்ரீதரா(நாமக்கல்), பூஜாஸ்ரீ(புரசைவாக்கம்) ஆகியோர் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தவர்கள் ஆவர்.
கணிதம்: 1141 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.(கடந்த ஆண்டு 12,532)
அறிவியல்: 9237 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.(கடந்த ஆண்டு 3677)
சமூக அறிவியல்: 5,305  பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.(கடந்த ஆண்டு 256)
ஆங்கிலம்: 3 பேர்  நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்
சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ், முதன் முறையாக நடத்தப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
மதிப்பெண் சான்றிதழ்கள் 21-ம் தேதி அன்று அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்  மூலம் வழங்கப்படும். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் இருந்து  சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.

ஞாயிறு, 3 ஜூன், 2012

நரேந்திர மோடிக்கு ஆர்.எஸ்.எஸ் கண்டனம் – ‘பிரதமர் பதவிக்கு நிறைய பேர் உள்ளனர்’


புதுடெல்லி:
3 Jun 2012
பா.ஜ.கவிலும், சங்க்பரிவாரத்திலும் வளர்ந்துவரும் உட்கட்சி பூசல் ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ ஏட்டின் நரேந்திர மோடிக்கு எதிரான விமர்சனம் மூலம் மேலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ ஏடான பாஞ்சசன்யாவின் புதிய பதிப்பில் குஜராத் முஸ்லிம் படுகொலை புகழ் நரேந்திரமோடியின் செயல்பாட்டு ரீதியும், இயக்க ரீதியான ஒழுக்கங்கள் குறித்தும் விமர்சனம் இடம் பெற்றுள்ளது.
அந்த ஏட்டில் கூறியிருப்பது: பிரதமர் பதவியில் அமர கட்சியில் நிறைய பேர் உள்ளனர். மோடி தனது செயல்பாட்டு ரீதி குறித்து மீளாய்வு செய்யவேண்டும். பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டத்தில் சஞ்சய் ஜோஷியின் ராஜினாமாவைக் கோரிய மோடியின் நிலைப்பாடு மீளாய்வுக்கு உட்பட்டது.
சங்க்பரிவார உறுப்பினரான மோடி, சக உறுப்பினரிடம் பகைமை பாராட்டுவது சரியல்ல. பா.ஜ.க தேசிய செயற்குழுவில் சஞ்சய் ஜோஷி பங்கேற்பது குறித்து ஊடகங்களில் தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தியது ஏன்?
பிரதமர் பதவிக்கான வேட்பாளர் குறித்த விவகாரத்தில் தீர்மானம், பொதுத் தேர்தலுக்கு பின்னர் எடுத்தால் போதும். இவ்வாறு அப்பத்திரிகை கூறியுள்ளது.
பா.ஜ.கவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தான் பங்கேற்க வேண்டுமானால், தனது முக்கிய எதிரியான சஞ்சய் ஜோஷி தனது பதவியை ராஜினாமாச் செய்யவேண்டும் என மோடி நிபந்தனை விதித்தார். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க மோடியிடம் சரணடைந்து சஞ்சய் ஜோஷியை ராஜினாமாச் செய்யவைத்தது.