சனி, 20 ஏப்ரல், 2013

ராஜஸ்தான்:விளையாட்டு விருது கிடைக்கவேண்டுமெனில் ஆர்.எஸ்.எஸ், ஜமாஅத்தே இஸ்லாமியில் தொடர்பு இருக்க கூடாது!


ஜெய்ப்பூர்:விளையாட்டுத்துறையில் விருது அளிப்பதற்கு ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு விசித்திரமான நிபந்தனையை விதித்துள்ளது. விருதுக்குபரிந்துரைக்கப்படவேண்டுமெனில் ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான ராஷ்ட்ரீய சுயம் சேவக்கிலோ, ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பிலோ உறுப்பினராக இல்லை என்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று அரசு நிபந்தனை விதித்துள்ளது. ராஜஸ்தான் ஸ்டேட்ஸ் ஸ்போர்ட்ஸ் கவுன்சில்தான் விருதுகளை வழங்குகிறது. 2012-13-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் விருதுக்கான தொகை 10 மடங்காக உயர்த்தப்பட்டது. முதல் கட்ட விருதுகளை கடந்த மாதம் ஸவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் வைத்து ஸ்போர்ட்ஸ் கவுன்சில் தலைவர் சிவ்சரண் மாலி வழங்கினார். 1986-ஆம் ஆண்டு முதல் அமலில் இருக்கும் மாநில அரசின் சட்டங்களை மட்டுமே தாங்கள் கடைப்பிடிப்பதாக ராஜஸ்தான் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் மேற்கண்ட நிபந்தனைக் குறித்து விளக்கம் அளித்துள்ளது. சட்டரீதியாக இயங்கும் ஒரு அமைப்பில் உறுப்பினராவதற்கான குடிமகனின் உரிமை மீதான அத்துமீறல் என்று அரசு நிபந்தனைக்குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார் ஜமாஅத்தே இஸ்லாமியின் ராஜஸ்தான் மாநில தலைவர் குர்ஷித் ஹுஸைன். ஜமாஅத்தே இஸ்லாமியில் உறுப்பினராக இருக்கிறார் என்பதற்காகவிளையாட்டு வீரருக்கு விருதை மறுக்கும் நிலைப்பாட்டிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வியாழன், 28 மார்ச், 2013

சவூதியில் சுதேசிமயம்: சோதனைகள் தீவிரம்!


தம்மாம்:சவூதி அரேபியாவில் உள்நாட்டு பணியாளர்களுக்கு வேலை வழங்குவதற்கான சுதேசி மயமாக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக சட்டவிரோத தொழிலாளர்களை கண்டுபிடிக்கும் பணியை அந்நாட்டின் தொழில் மற்றும் உள்துறை அமைச்சகங்கள் தீவிரப்படுத்தியுள்ளன. பரிசோதனையில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொந்த ஸ்பான்ஷரின் கீழ் வேலைச் செய்யாமல் வேறு பணிகளை புரிபவர்கள் மற்றும் தங்கும் அனுமதி(இகாமா)யின் கால அவகாசம் தீர்ந்தவர்களும் கைது செய்யப்படுகின்றனர். ஸ்பான்ஸர்களின் கீழ் வேலைச் செய்யாத ஃப்ரீ விசாவில் பணியாற்றுபவர்கள் மற்றும் சட்டவிரோதமாக வேலை பார்ப்பவர்கள், தங்கியிருப்பவர்கள் ஆகியோரை கைது செய்து நாடு கடத்த கடந்த வாரம் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தொழில்-உள்துறை அமைச்சகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அந்நாட்டின் ஆட்சியாளர் மன்னர் அப்துல்லாஹ்வும் இத்தகைய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். தலைநகரான ரியாதில் பத்ஹா, தம்மாமின் இதய பகுதியான ஸீக்கோ பில்டிங் பகுதி, ஜித்தா, அல்ஹஸ்ஸா ஆகிய பகுதிகளில் போலீசாரின் உதவியுடன் அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சனிக்கிழமை முதல் பல்வேறு பகுதிகளில் ரெய்டு தீவிரப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நிபந்தனைகளை கடைப்பிடிக்காத சிறு கடைகள் பூட்டிக்கிடக்கின்றன. ஃப்ரீ விசாக்காரர்களான வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பி கட்டிட வேலைகளை நடத்தி வந்த கட்டுமான ஒப்பந்த நிறுவனங்கள் நேற்று முதல் தொழிலாளர்களுக்கு விடுப்பு அளித்துள்ளன. நாட்டின் தொழில்துறையை சட்டப்பூர்வமாக மாற்றவும், சுதேசிகளுக்கு முடிந்தவரை வேலைவாய்ப்புக்களை உருவாக்கவும் நோக்கமாக கொண்டு இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சவூதியின் தொழில் அமைச்சர் எஞ்சீனியர் ஆதில் ஃபகீஹ் தெரிவித்துள்ளார். கல்வி தகுதியும், பணிச்செய்ய தயாராக உள்ள உள்நாட்டில் வேலையில்லாதவர்களுக்கு வாய்ப்புக்களை உருவாக்கும் நோக்கத்துடன் 2011 நவம்பர் மாதம் முதல் சுதேசிமயமாக்கும் திட்டமான நிதாகத் சவூதியில் அமல்படுத்தப்பட்டது.

கார்கில் போருக்காக பெருமைப்படுகிறேன் பாக்., "மாஜி' அதிபர் முஷாரப் பேட்டி


கராச்சி:""கார்கில் போர் குறித்து பெருமிதப்படுகிறேன்,'' என, பாகிஸ்தான் முன்னாள் அதிபர், பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார். ராணுவ தளபதியாக இருந்த முஷாரப், 1999ல், பிரதமராக இருந்த, நவாஸ் ஷெரீபின் அரசை, ராணுவ புரட்சி மூலம் கவிழ்த்து, ஆட்சியை கைப்பற்றினார்.பின், 2002ல், பாகிஸ்தான் அதிபரான இவரது ஆட்சிக்காலத்தில், முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ கொல்லப்பட்டது, நீதிபதிகளை கைது செய்தது தொடர்பாக, முஷாரப் மீது குற்றம் சாட்டப்பட்டது.இதையடுத்து, 2008ல், அதிபர் பதவியை ராஜினாமா செய்த முஷாரப், நாட்டை விட்டு வெளியேறி, துபாய் மற்றும் பிரிட்டனில் தஞ்சமடைந்தார். வரும், மே, 11ல், பொது தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், "அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக்' கட்சி சார்பாக, தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.இதற்காக தற்போது, அவர் நாடு திரும்பியுள்ளார்.கராச்சியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:கார்கில் போரில், இந்தியாவின் கழுத்தை பாக்., பிடித்தோம், பாக்., வசம் உள்ள கார்கில் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக போர் நடந்தது. இந்தப் போருக்கு இந்தியா தான் காரணம். இந்த போரை நடத்தியதற்காக பெருமைப்படுகிறேன்.இவ்வாறு, முஷாரப் கூறினார்.